தூத்துக்குடி மாவட்டம் :வல்லநாடு அருகேயுள்ள நாணல்காட்டான் என்ற பகுதியை சேர்ந்த மூன்று குழந்தைகளும் (31.07.2020) அன்று மதியம் 2 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை, இதனால் அவரது தாத்தா மற்றும் பாட்டி மாலை 6 மணிக்கு முறப்பநாடு காவல நிலைய ஆய்வாளர் பார்த்திபன் புகார் அளித்துள்ளனர்.
உடனடியாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முறப்பநாடு போலீசார் அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் குழந்தைகள் வட வல்லநாடு காட்டுப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று குழந்தைகளை மீட்டனர்.
குழந்தைகளை விசாரித்ததில், அவர்கள் தங்களது தாய், தந்தையர் குடும்பச் சண்டை காரணமாக இருவரும் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும், தாங்கள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பெற்றோர்கள் இல்லாத மன வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியேறி எங்காவது செல்வது என்று முடிவெடுத்து சென்றதாகவும், அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கி உணவும் வாங்கிக் கொடுத்து குழந்தைகளை தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்தார்.
புகார் வந்த ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்ட முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ராஜா ராபர்ட், தலைமைக் காவலர் ரவி, காவலர்கள் கோகுல கிருஷ்ணன் மற்றும் பெரும்படையான் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.