ஆர்.டி.ஐ , மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள். அலட்சியம் மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய சமுக ஆர்வலர் கோரிக்கை

Spread the love

திருப்பூர் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் விவரங்களை தருவதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்வதால், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அரசுத்துறைகளில் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தர கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வது இச்சட்டத்தின் நோக்கமாகும்.

 

பொதுமக்கள் தகவல் கோரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். அவசர தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும். தவறினால் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காதது, தவறான தகவல்கள் தருதல், வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தந்தால் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதோடு, 250 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கலாம்.

 

இச்சட்டம் அமலுக்கு வந்த பின், நாடு முழுவதும் ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பல பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைத்துள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் இச்சட்டம், கேலிக்கூத்துக்கு உள்ளாகி வருகிறது. மாவட்டத்தில் ஒரு துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை.

 

உதாரணத்திற்கு திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியிலுள்ள ரேசன் கடைகளில் தினந்தோறும் நடைபெற்று வரும் ரேசன் அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்களை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவது குறித்தும் கடத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போயம்பாளையம் நந்தா நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் குப்புசாமி என்பவர் மீது தற்போது வரை பல்வேறு முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்குண்டான காரண விபரங்கள், திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட ரேசன் கடைகளில் தொடர்ந்து ரேசன் பொருட்களை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்து குப்புசாமி என்பவர் மீது கடந்த 2015 ம் ஆண்டு முதல் இன்று வரை எத்தனை புகார்கள் பெறப்பட்டுள்ளது அதன் விபரங்கள் மற்றும் அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்கள்,

திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் சொசைட்டிக்கு போயம்பாளையம் பகுதியிலுள்ள சண்முகம் மகன் குப்புசாமி என்பவர் மீது பல்வேறு முறை புகார் அளித்தும் தற்போது வரை போயம்பாளையம் பழனிச்சாமி நகர் உள்ளிட்ட ரேசன் கடைகளில் தொடர்ந்து ரேசன் பொருட்களை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதின் காரண விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை போயம்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தகவல் உரிமை சட்டதின் கீழ் பொது தகவல் அதிகாரி

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை,

ராஜன் நகர், வீரபாண்டி, பல்லடம் சாலை, திருப்பூர் மாவட்டம், என்ற முகவரிக்கு விபரங்களை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் சம்பந்தப்பட்ட பல்லடம் சாலையிலுள்ள வீரபாண்டி

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் இக்கடிதத்தை வாங்க மறுத்து மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளனர்.

அதற்கு சம்பந்தப்பட்ட நபர் செல் போன் மூலம் கேட்டதற்கு அலுவலர் அளித்த பதிலில், விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரில் சென்று பார்த்து கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார். விண்ணப்பதாரர் கோரும் நகல்களுக்கு, உரிய கட்டணத்தை செலுத்த அறிவுறுத்த வேண்டும். பின், அதற்கான நகலை தகவல் அலுவலர் அனுப்ப வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் நேரில் சென்று பார்த்துக்கொள்ளுமாறு பதில் அளிப்பது வியப்பாக உள்ளது.

 

இதேபோன்று, 30 நாட்களுக்குள் வழங்க வேண்டிய பதில்கள், 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை தாமதமாக வழங்கப்படுகிறது. சில துறைகளில் பதில்கள் தருவதே கிடையாது. அந்த பதிலும் சரியாக வழங்காமல் கடமைக்கு, நாங்களும் பதில் அனுப்பினோம் என்ற நோக்கில் சில பதில்களை அளிக்கின்றனர்.விண்ணப்பத்தாரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காததால், அவர்கள் மேல்முறையீட்டு அலுவலரிடம் மனு அனுப்பி தங்களுக்கு தேவையான விவரங்களை பெறும் சூழ்நிலை நீடித்து வருகிறது.

 

இதனால், தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. மாவட்டத்தில் தகவல் அலுவலர்களின் அலட்சியப்போக்கான இந்த நடவடிக்கை, சமூக ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, போக்குவரத்து துறை, ஆகிய துறைகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதற்கு பதில் அளிக்க அதிகாரிகள் கால தாமதம் செய்கின்றனர். ஒரு மனு மீது பதிலளிக்க 90 நாள் வரை எடுத்துக்கொள்கின்றனர். மேலும், விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்காமல் மெத்தனமாக உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என , சமூக ஆர்வலர் சரவணன் கூறினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *