தஞ்சை: பேராவூரணி அருகே ஒட்டங்காட்டில் ஒரே இரவில் 3 இடங்களில் திருட்டு

Spread the love

தஞ்சாவூர்  மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், புதன்கிழமை அன்று ஒரே இரவில் 3 இடங்களில் தொடர் திருட்டு நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (48). இவர் தனது ஓட்டு வீட்டில், குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ஆடு விற்பனை செய்து விட்டு வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ 13 ஆயிரத்தையும் திருடிச் சென்று விட்டனர்.

அதே இரவில் பக்கீர் முகமது என்பவரின் மாடி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்த, அவரது மருமகள் ஜமீலா அணிந்திருந்த அணிந்திருந்த செயினை அறுக்க முயன்றுள்ளனர். கண் விழித்து எழுந்த ஜமீலா சத்தம் போட்டதும், செயினைக் காப்பாற்ற போராடிய போது, அறுந்து திருடன் கையில் 2 பவுன் செயின் சிக்கியது.
அதே இரவில் பிரபு (38) என்பவரின் கூரை வீட்டில் புகுந்து 4 கிராம் ஜிமிக்கியையும் திருடிச் சென்றுள்ளனர். திருட்டு நடந்த 3 வீடுகளும் அருகருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூவரும் தனித்தனியே திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினார். தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் ராஜராஜன் கொண்டு வரப்பட்டது. சிறிது தூரம் சுற்றி வந்த மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

ஒட்டங்காடு வர்த்தக சங்க நிர்வாகிகள் கூறுகையில், “காவல்துறையினர் இரவு நேரங்களில் ஒட்டங்காடு பகுதியில் ரோந்து செல்ல வேண்டும். கடைத்தெருவில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்” என்றனர்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *