நீலகிரி: 3 மணி நேரம் காத்திருந்த நமீதா; சாலையை மறித்து பிரசாரம்! – கொந்தளித்த மக்கள்

Spread the love

காங்கிரஸும், பாஜகவும் நேருக்கு நேர் மோதும் ஊட்டி தொகுதியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில், ஊட்டி தொகுதியின் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான நமீதா நேற்று பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

 

ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் சரியாக பகல் 1 மணிக்கு பரப்புரை துவங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. ஊட்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நமீதா பிரசார கூட்டத்திற்கு கிளம்ப தயாரானார். “கூட்டத்தில் 50 பேர் கூட இல்லை சற்று தாமதமாக போகலாம்” என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்க, கூட்டம் சேரட்டும் என ஓட்டலிலேயே காத்திருந்தார்.

 

இடைப்பட்ட நேரத்தில் அதிமுகவின் ஊட்டி நிர்வாகிகளின் உதவியுடன் அதிமுக தொண்டர்கள் சிலரை அழைத்து வந்தனர். அவர்கள் வந்து நின்ற சிறுது நேரத்திலேயே மழை தூறலிடத்த துவங்கியது. இதனால் இருந்த கூட்டமும் நகரத் துவங்கியது. 3 மணி நேரமாக ஓட்டலில் காத்திருந்த நமீதா, கடுப்பாகி மழையோடு மழையாக கிளம்பி வந்து காஃபி ஹவுஸ் பகுதியில் நின்று பிரசாரம் செய்துவிட்டு வாகனத்தில் ஏ.டி.சி பகுதிக்குச் சென்றார்.

 

ஏ.டி.சி பகுதியில் யாருமே இல்லாததால் வேட்பாளரிடம் கடுகடுத்தார். நிலைமையை சமாளிக்க அதிமுக நிர்வாகிகள் உதவியுடன் போக்குவரத்தை மறித்து நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி பரப்புரையைத் துவக்கினர். அரசுப் பேருந்துகள் முதல் பைக் வரை போக்குவரத்து தடைப்பட்டு மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கியது.

 

எழுதி கொடுத்ததை நமீதா பேச, போக்குவரத்தில் ஸ்தம்பித்த வாகனங்களின் ஹாரன் சவுண்டு காதைக்கிழிக்க கடுப்பாகி பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பினார்.

 

அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவியோட பிரசார வண்டிய நடு ரோட்டுல நிறுத்தி அட்ராசிட்டி பிரசாரம் பண்றாங்க. இதுக்கு போலீஸாரும் உடந்தை. அப்பாவி மக்கள்தான் டிராஃபிக்ல மாட்டி கெடக்கோம்”என புலம்பினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *