தமிழக வாக்கு எண்ணிக்கை அய்யோ, இவ்வளவு கட்டுப்பாடுகளா?

Spread the love

மே 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அது குறித்த முக்கிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

முழு ஊரடங்கில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை

கொரோனா கட்டுப்பாடுகள் கறார்

வாக்கு எண்ணிக்கை எப்படி நடத்தப்படும் என்பது குறித்து முழு தகவல்

 

 

தேர்தலை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்தி முடிப்பது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி. தற்போது அத்துடன் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் காரணமாகிவிடக்கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலும் இணைந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் பிரச்சாரம் முக்கிய காரணம் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.

 

இந்நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. முன்னதாக மே 1, 2 ஆகிய இரு தேதிகளில் ஊரடங்கு விதிப்பது தொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தமிழக அரசோ மே 1 ஊரடங்குக்குக்கு அவசியம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும். உணவகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் ஊழியர்கள், முகவர்களுக்கு முழு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே பொதுமக்கள் திரள அனுமதியில்லை.

 

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியிருக்க வேண்டும். அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரும் போது உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது வெப்பநிலை 98.6க்கு மேல் இருந்தால் முகவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

 

முகவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், மாற்று முகவரை வேட்பாளர் நியமிக்கலாம். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியே பொறுப்பு. அவருக்கு தேவையான உதவியை சுகாதார அதிகாரி வழங்க வேண்டும்.

 

கொரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சம்பந்தப்பட்ட நபர்கள் சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற வேண்டும்.

 

 

மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை பணிக்காக கூடுதலாக தேர்தல் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனி அறையில் தபால் வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் கண்காணிக்கலாம். 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 2ஆம் தேதி எந்தவொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் அனுமதி கிடையாது. வெற்றி பெறும் வேட்பாளருடன் இரண்டு பேருக்கு மேல் வெற்றிச் சான்றிதழ் பெற வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அரங்கில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், சரியான காற்றோட்ட வசதி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பின்பும் அந்த மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாட்டு அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *