இஎம்ஐ கால அவகாசம்.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி.. 12 மாநில முதல்வர்களுக்கு நமது முதல்வர் அவசர கடிதம்!

Spread the love

சிறிய கடன் வாங்கியவர்களுக்கு 6 மாத காலத்திற்கு ‘இ.எம்.ஐ’ கால அவகாசம் கேட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தடுப்பூசி விவகாரத்தில் ஒற்றுமையுடன் வலியுறுத்தியதால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும், இதேபோல் கடன் தவணை விவகாரத்திலும் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லாத காரணத்தால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

இத்துடன் மாதம் பிறந்த உடன் வரும் இஎம்ஐகளை எப்படி கட்டுவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நிலைப்பாடை மாற்றிய மத்திய அரசு
ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக மத்திய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம். ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தினோம், இந்நிலையில் நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றியமைத்துள்ளார்.

இரண்டாவது அலை
இந்த சூழ்நிலையில், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்

கூடுதல் அவகாசம்
2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை. எனவே கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றுள்ளேன்.

கூட்டு வலிமை
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என நான் உங்களை (முதலமைச்சர்களைக்) கேட்டுக் கொள்கிறேன். இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *