மணல் சேகர்ரெட்டியின் அறிவிப்பு

Spread the love

பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி தலைமையிலான நால்வர் கூட்டணிக்கு மீண்டும் மணல் குவாரி அமைப்பதற்கான டெண்டர் ரகசியமாக ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இதற்காக தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தரப்புக்கு 300 கோடி ரூபாய் கைமாறியிருப்பதாகவும் ஆடியோ உரையாடல் ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகி பெருத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்தநிலையில், தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சேகர்ரெட்டி.

 

‘ஜெ.சேகர் என்கிற சேகர்ரெட்டி’ என்ற பெயரில் கையெழுத்திட்டு வெளியிருக்கும் அந்த அறிவிப்பில், ‘‘தமிழக முதலமைச்சர் தலைமையின்கீழ் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதற்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாள்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் எனக்கும், மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்திருப்பதாகச் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியிருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

 

 

எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 வருடங்களில் தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளுக்கு எந்தவோர் ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை. வேண்டுமென்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாகப் பொதுமக்களுக்கு விற்பனை செய்துவந்தோம்.

 

இதைத் தவிர, நேரடியாக நாங்கள் எந்தவோர் ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றதில்லை. இனிவரும் காலங்களிலும் நானும், எனது நிறுவனமும் தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இது போன்ற செயல்களில் எனது பெயரைப் பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அந்த கடிதத்தில்  கூறியிருக்கிறார், சேகர்ரெட்டி.

 

 

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *