ரூ.122 கோடியில் புனரமைப்பு பணி.. கல்லணையில் நேரடியாக ஆய்வு செய்த நமது முதல்வர் ஸ்டாலின்

Spread the love

தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள கல்லணை மிக மிக பழமையான அணையாகும். தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆதாரமாக விளங்குவது கல்லணையாகும்.

 

கல்லணையில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.122.60 கோடி செலவில் அணையை பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

கல்லணையில் உள்ள காவிரி ஆற்றின் மதகுகளை சீரமைத்தல், தூண்களின் மீது கம்ப்ரஷர் உதவியோடு கலவைப் பூச்சு செய்து பலப்படுத்துதல், மண் அரிப்பை தடுக்கும் வகையில் தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், அணைக்கு அருகே கரை அரிப்பை தடுக்கும் வகையில் காவிரியில் இருபுறமும் கரைப்பகுதியில் கான்கிரீட் சாய்தளம்(ரிவிட்மென்ட்) அமைத்தல், ஷட்டர்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீவிரமாக நடந்து வரும் புனரமைப்பு பணிகள் குறிததும், தரம் குறித்தும் அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் இந்த பணிகள் தொடர்பாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

 

நாளை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையில் முதல்வர் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்து வாரி வடிகால் தூர்வாரும் பணியையும், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

புத்தகம் கொடுத்த ஆட்சியர்

இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொதுப்பணி துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக கல்லணைக்கு வந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தகங்களை அளித்து வரவேற்றனர்.

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *