தமிழகத்தில் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்:

Spread the love

சென்னை:தமிழக காவல்துறை சட்டம் – ஒழுங்கு டிஜிபி (HOPF) திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறுவதால், புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியைத் தேர்வு செய்யும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், யூபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகக் காவல்துறையில் உயரிய பதவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி. தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள்.

 

இந்தப் பதவிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரியைத் தமிழக அரசு நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யூபிஎஸ்சி) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். இது உச்ச நீதிமன்ற உத்தரவு. அப்படித் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் பதவியில் இருப்பார்.

 

தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறுவதால் தற்போதுள்ள டிஜிபிக்களில் தகுதியுள்ள 7 பேர் பட்டியல் யூபிஎஸ்சி பார்வைக்குச் சென்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் டெல்லி சென்றனர்.

 

அடுத்த சட்டம் – ஒழுங்கு டிஜிபி பட்டியலில் 7 அதிகாரிகள் பெயர் அனுப்பப்பட்டது. 1. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, 2. மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, 3. தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, 4. சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், 5. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, 6. சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், 7. டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் ஆவர்.

 

இதில் சைலேந்திர பாபு, சஞ்சய் அரோரா, கரன் சின்ஹா ஆகியோரின் பெயர்ப் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதில் இறுதிப் பட்டியலில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா இருவர் பெயர் மட்டும் இருந்தது என்றும் தகவல் தலைமைச் செயலக வட்டாரத்தில் கசிந்தது. இந்நிலையில் சைலேந்திர பாபுவை புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமித்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

 

புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. தற்போது ரயில்வே டிஜிபியாகப் பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம் – ஒழுங்கு பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவராவார். புதிய டிஜிபி நாளை பகல் 12 மணி அளவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *