கரூர் மாவட்ட 9 வது மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செயலாளராக தோழர் ஜோதிபாசு தேர்ந்தெடுக்கப்பட்டார் 

Spread the love

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 9 வது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கி, திங்கள்கிழமையன்று மாலை நிறைவடைந்தது.

தரகம்பட்டி கடைவீதியில் சென்தொண்டர் பேரணியுடன் துவங்கிய மாநாட்டிற்கு ஜி.ஜீவானந்தம், இரா.முத்துசெல்வன், சுதா ஆகியோர் தலைமை வகித்தனர்‌. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், வரவேற்பு குழுத்தலைவர்

பி.ராமமூர்த்தி வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் மாநாட்டை துவக்கி வைத்து சிற்ப்புரையாற்றினார்.மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி வேலை அறிக்கையை முன் வைத்து பேசினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் வரவு- செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஜோதிபாசு, வரவேற்புக் குழு பொருளாளர் பி.வேல்முருகன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.

 

புதிய மாவட்டச் செயலாளராக தோழர் ஜோதிபாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கந்தசாமி,ஜீவானந்தம்,

பி.ராஜூ,சக்திவேல்,முருகேசன்,

இரா. முத்துச்செல்வன்,பி.ராமமூர்த்தி சிஆர். ராஜாமுகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

 

கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வரவேற்பு குழு செயலாளர் பி.பழனிவேல் நன்றி கூறினார்.

 

ஜவுளி ஏற்றுமதி தொழில் மூலம் கரூரில் பல லட்சக்கணக்கானமக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஒன்றிய பிஜேபி அரசின் தவறான ஏற்றுமதி கொள்கையால் நம் தேவைக்கு பருத்தியை இருப்பு வைக்காமல் ஏற்றுமதி செய்வதால் நூல் விலை கடுமையாக ஏறி வருகிறது. பருத்தி பதுக்கலை தடுத்து நூல் விலையை குறைக்கவும், ஜவுளி ஏற்றுமதி தொழிலை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கரூரில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கு தொடர்ந்து அறிவிக்கப்படுவதும், இடத்தை தேர்வு செய்வதுமாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் புதிய பேருந்து நிலையம் இன்று வரை அமைக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது திமுக ஆட்சியிலும் கரூர் புறநகர் பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகர போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு உடனடியாக புதிய புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும்.

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரி, தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை குளம், கடவூர் ஒன்றியத்திலுள்ள முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி உடையாப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு அந்த பகுதியின் நிலத்தடி நீர் உயர்வதோடு குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரிய அளவில் பயன்படும் எனவே இந்த குளத்திற்கு காவிரியில் இருந்து பெரிய குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து குளத்தை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரகம்பட்டியில் தற்பொழுது செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடத்தை உடனே கட்டி மாணவர்கள் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். மைலம்பட்டி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் அதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. பிரேத பரிசோதனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தி உரிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவூர் ஒன்றியத்திலிருந்து நீதிமன்றம் செல்ல 70 கிலோ மீட்டர் தொலைவு குளித்தலைக்கு செல்ல வேண்டியுள்ளதால், தரகம்பட்டியில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும். தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். பாலவிடுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும். கடவூர் ஒன்றியம் வறட்சி பகுதியாக இருப்பதால் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலையை அமைக்க வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

 

கிருஷ்ணாபுரம் ஒன்றியம் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் அமர்த்தி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் முருங்கைக்காய் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. முருங்கை விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. முருங்கைக்காய்க்கு கட்டுப்படியானா விலையை நிர்ணயம் செய்திடவும், இடைத்தரகர்களை தவிர்த்திடவும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்திட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அரவக்குறிச்சி முருங்கை விளை பொருட்கள் மதிப்பு கூட்டு ஆலை அமைத்திட வேண்டும். அரவக்குறிச்சியில் கலைக்கல்லூரி, புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும். அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட கரூர்- திண்டுக்கல் தேசிய சாலையில் வணிக வளாகங்கள் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கரூர், மலைக்கோவிலூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி வழியாக பாலக்காட்டுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.

 

1995ம் ஆண்டு கரூர் மாவட்டம் உருவான போதே பேருராட்சியாக இருந்த குளித்தலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 25 ஆண்டுகள் மேலாகியும் குளித்தலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு குளித்தலை நகரத்தில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே உடனடியாக நியமனம் செய்து அனைத்து மருத்துவ தனி பிரிவுகளையும் உருவாக்கி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயம் சார்ந்த பகுதியான குளித்தலையை மையப்படுத்தி இனுங்கூரில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர், வதியம், கே. பேட்டை ஆகிய பகுதிகளில் மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். மணல் லாரிகள் கட்டுக்கடங்காமல் செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளை தடுத்திட இந்த பகுதியில் மணல் குவாரி அமைக்கும் பணியை தமிழக அரசு கைவிட வேண்டும். உள்ளூர் கட்டுமான தேவைக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். கரூர் ஒன்றியம் மரவாபாளையம்கிராமத்திற்கு ரயில்வே பாதையை கடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது எனவே அப்பகுதி கிராம மக்களின் நலனை மேற்கொண்டு உடனடியாக ரயில்வே குகைவழிப் பாதை அமைக்க வேண்டும்.

 

தொழிலாளருக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகள் மற்றும் மின்சார சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிடக்கோரியும், கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தை கரூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிடவும். ஒன்றிய பிஜேபி அரசு தனது பதவியை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் செய்யாமல் விவசாயத்தை முற்றிலும் சீர்குலைக்ககூடிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உலக வரலாற்றில் முதன்முறையாக ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதை கரூர் மாவட்ட 9ஆவது மாநாடு வாழ்த்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.