கரூர்: குளித்தலை எஸ்பிஐ வங்கி விவசாயி தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் போராட்டம்

Spread the love

குளித்தலை எஸ்பிஐ வங்கியில் விவசாயி வாங்கிய கடனுக்கு வங்கி நிர்வாகம் சொத்தை அபகரித்து விவசாயி தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, திடீர் மறியல் போராட்டத்தால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை பாரத ஸ்டேட் வங்கியில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக டிராக்டர் மற்றும் பைப்லைன் போடுவதற்கு ரூ.12 லட்சம் கடன் பெற்றதில் அதில் 2 லட்சம் பிடித்தம் செய்து கொண்டு கொடுத்துள்ளனர்.

வாங்கிய 10 லட்சத்தில் 9 லட்சம் பணத்தை திருப்பி கட்டியுள்ளார். தற்பொழுது, 68 லட்சம் தரவேண்டுமென்று வழக்கு போட்டு பூர்வக சொத்தை 5 வாரிசுகள் இருக்கும்போது அவர்களை கேட்காமலே ரூ.58 லட்சத்திற்கு 11.5 ஏக்கர் நிலத்தினை ஏலம் விட்டதனால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருவதால், தற்கொலைக்கு தூண்டிய குளித்தலை எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பாக 100க்கும் மேற்பட்டோர்கள் மண்டை ஓட்டை கழுத்தில் தொங்கவிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது குளித்தலை டிஎஸ்பி ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு சங்கத்தலைவர் உட்பட நான்கு பேர்களை தவிர அனைவரையும் போலீசார் கைது செய்து அண்ணா சமுதாய கூடத்தில் அடைத்தனர்.

பிறகு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 4 பேர் போலீசாருடன் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவை இந்திய பிரதமர் மோடியிடம் கொண்டு சென்று கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக்கொண்டு பிரதமருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

போராட்டத்தின்போது அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில்:
பாஜக நரேந்திரமோடி தேர்தலின் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் தேர்தல் முடிந்தவுடன் தாங்கள் அடிமைகள் என்றும், நான் பிரதமரானால் விவசாயப் பொருட்களின் விலையை இரு மடங்காக உயர்த்துவேன் என்று கூறியவர் அதனை செய்யவில்லை என்றும்,

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த மோடியின் ஒன்றிய அரசாங்கம், இந்திய நாட்டில் 90 கோடி விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் இருப்பதாகவும், தனியார் வங்கிகள் தான் விவசாயிகளை அடியாட்களை வைத்து வஞ்சித்து வந்த நிலையில் தற்போது மோடியின் ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விவசாயிகளுக்கு ஒத்துவராத சட்டத்தைப் பயன்படுத்தி கடன்பெற்றதற்காக விவசாயிகளுக்கு தெரியாமலே விவசாயிகளின் நிலங்களை ஏலம் விட்டு விவசாயிகளிடம் கொள்ளையடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தினேஷ், மாநில துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, குளித்தலை நகர செயலாளர் மோகனசுந்தரம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் உட்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email