திருச்சி அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று இரட்டை சகோதரர்கள் உபயத்தில், இராஜகோபுரம் கும்பாபிஷேக விழா

Spread the love

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 6.45 மணி முதல், 7.25 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

 

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், ‘வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்’ அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்.

 

திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து சமயபுரம் மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறார்.

 

கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பூச்சொரிதல் விழாவும் அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம்.

ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் கோயிலில், புதிதாக கிழக்கு ராஜகோபுரம், ஏழுநிலைகள் கொண்டு கட்டப்பட்டு, எழிலுடன் பஞ்ச வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், நன்செய் இடையாரை சேர்ந்த பொன்னர் – சங்கர் என்ற இரட்டை சகோதரர்கள் உபயத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

 

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நாளை காலை புதன்கிழமை காலை 6.45 முதல் 7.25 மணிக்குள் கடக லக்னத்தில் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவானது கடந்த 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியுள்ளது. 4ஆம் தேதி கணபதி ஹோமமும், 5ஆம் தேதி இரண்டாம் கால யாகபூஜையும், 6ஆம் தேதி நான்காம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது.

 

கும்பாபிஷேக விழாவில், இந்நாள், முன்னாள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்

Print Friendly, PDF & Email